நிதிமோசடி குற்றச்சாட்சில் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் பினையில் விடுதலை செய்ய்ப்பட்டுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள நிதிக்குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று முற்பகல் விசாரணைக்குச் சென்றபோது கைது செய்யப்பட்ட மஹிந்தானந்த அழுத்தகமகே, நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாரினால், கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது மஹிந்தானந்த அழுத்கமகேயின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பினையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். 2014ஆம் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்தபோது, 39 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றசாட்டு தவறானது என்பதை மஹிந்தானந்த அழுத்கமகே, விசாரணையின்போது நிரூபிப்பார் என்றும், அதனால் அவரை பினையில் விடுதலை செய்யுமாறும் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
சட்ட மா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்தமையினால் அவர் பினையில் விடுதலையானார் என்று அவரது சட்டத்தரணி கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தில், மத்திய வங்கி பினைமுறி ஊழல் விவகாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்வில்லை என்றும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி, மக்களை திசை திருப்புவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்தானந்த அழுத்தகமகே மஹிந்த ராஜபக்சவை மைய்ப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.