இந்த சிக்கன் சால்னா கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் மிகவும் பிரசித்தம். இந்த சால்னாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 1 பெரியது
பச்சை – மிளகாய் 2
இஞ்சி – பூண்டு விழுது – 2 மேஜைகரண்டி
சிக்கன் – 500 கிராம்
சிக்கன் தோல் – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
டால்டா – 1 மேஜைக்கரண்டி
பட்டை – 1 இன்ச்
இலவங்கம் – 3
மிளகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 மேஜைக்கரண்டி
பூண்டு – 5 பற்கள்
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 4 பெரியது
தேங்காய் துருவல் – 1 கப்
கரம்மசாலா தூள் – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 10
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி பொடி – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு பட்டை, லவங்கம், அன்னசிபூ, மிளகு, கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் கரம்மசாலா தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் தேங்காய் துருவல் மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கி கலவையை குளிர வைத்து பிறகு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் டால்டா ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும், பச்சைமிளகாய் மற்றும் மஞ்சள்தூளை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் சிக்கன், சிக்கன் தோல் போட்டு நன்றாக வதக்கவும், அதில் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இப்பொழுது அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக 15 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும்.
அதில் இருந்து எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை சால்னாவை நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு இறக்கவும்.
சூப்பரான சிக்கன் சால்னா ரெடி.