பஞ்சாப அணிக்கெதிரான போட்டியின் போது பிராவோவை முன்னரே இறக்கியிருந்தால்போட்டியின் முடிவே மாறியிருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது சென்னை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.
நேற்று பெற்ற ஒரு தோல்வியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் ஒரே அடியாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பிராவோ, மும்பை அணிக்கெதிரான போட்டியில் 30 பந்துகளுக்கு 68 ஓட்டங்களும், இரண்டாவது போட்டியில் கடைசி கட்டத்தில் சிக்ஸர் அடித்து ஜடேஜாவுக்கு அழுத்ததை குறைத்தார்.
இப்படி சிறப்பாக விளையாடி வந்த பிராவோவை நேற்றைய போட்டியில் டோனி ஏன் ஜடேஜாவுக்கு முன்னே இறக்கவில்லை.
அவர் இறங்கியிருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும், ஜடேஜா ஆரம்பத்தில் சில பந்துகளை அடிக்க தவறிவிட்டார், அதுவே பிராவோ என்றால் அதிரடி காட்டி வெற்றிக்கு அழைத்துச் சென்றிருப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பேசிய டோனி, இடது கை மட்டையாளர் ரெய்னா இல்லாத காரணத்தினால் ஜடேஜாவை அந்த இடத்தில் இறக்கியதாகவும், அதுமட்டுமின்றி அந்த சமயத்தில் இடது கை மட்டையாளர் தான் சரியானதாக இருப்பார் என்று கருதியே இறக்கியதாக கூறியிருந்தார்.
மேலும் நேற்றைய போட்டியின் போது டோனி தனி ஒருவனாக கடைசிவரை போராடி 44 பந்துகளுக்கு 79 ஓட்டங்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.