நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முழுமையாக இரத்து செய்வதற்கான யோசனைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தயார் என்பதை ஸ்ரீலங்காவின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச, ஜே.வி.பியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரியப்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக இல்லாதொழிக்கும் யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இருந்த போதிலும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை எதிர்வரும் 8ஆம் திகதிவரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டார்.
இதன் காரணமாக அடுத்த வாரமளவில் சபையில் சமர்பிக்கப்படவிருந்த ஜே.வி.பியின் பிரேரணையும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஜே.வி.பியின் இந்த யோசனை தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
நிறைவேற்று அதிகா ஜனாதிபதி முறையை நீக்கும் ஜே.வி.பியினரது யோசனைக்கு முழுமையான ஆதரவை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்திருப்பதை ஜே.பி.பியின் தலைவரும், எதிர்கட்சி பிரதம கொறடாவுமான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்திருப்பதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இந்த பிரேரணையில் ஒரு திருத்தத்தை உள்வாங்குமாறு மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்திருப்பதாகவும், குறித்த பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் முழு நாடாளுமன்றமும் கலைக்கபட வேண்டும் என்ற திருத்தம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு வினவுவதற்கு முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.