ஐக்கிய தேசிய கட்சியிக்குள் இடம்பெறப்போகும் அதிரடி மாற்றங்கள் குறித்து மே தினக் கூட்டங்கள் இடம்பெறும் எதிர்வரும் மே 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் உபதலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் இன்று அலரிமாளிகையில் கூடி கட்சியின் முழுமையான மறுசீரமைப்பு குறித்து ஆராயவுள்ளனர்.
இக்குழுவில், அகில விராஜ் காரியவசம், ரன்ஜித் மத்துமபண்டார, கயந்த கருணாதில, மங்கள சமரவீர, நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்ணான்டோ, அஜித் பி. பெரேரா, ஹெரான் விக்கிரமரட்ன, ருவான் விஜேயவர்த்தன, ஜே.சி. அலவத்துவல, நளீன் பண்டார, அசோக பிரியந்த ஆகிய 14 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று கூடும் இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி, இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், 2020 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்வது குறித்தே ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினர் கட்சியின் மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகளையும், சிபாரிசுகளையும் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தின் முடிவுகள் மே தினத்தன்று அறிவிக்கப்படும் என கட்சி அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் முன்னணியும் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அரசாங்கத்தின் எதிர்காலம் மற்றும் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் ஆகிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.