அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வரிச் சலுகை இன்று (22) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த தகவலினை ஏற்கனவே கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜீ.எஸ்.பி) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியது.
இந்நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை.
இதனால் ஜீ.எஸ்.பி கடந்த 2017 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜீ.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு ஜனவரி 1, 2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டது.எது எப்படியிருப்பினும் மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.