நிகாராகுவா நாட்டில் ஓய்வூதிய குறைப்பு மற்றும் தொழிலாளர் பணியை அதிகரிப்பது ஆகிய நடவடிக்கைகளை அமலாக்க அரசு திட்டம் தீட்டியது.
குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு கரீபியன் கடலோர பகுதியில் அமைந்த புளூபீல்டு நகரில் அரசுக்கு எதிராக இந்த வாரம் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் இதுபற்றி ஏஞ்சல் கஹோனா என்ற ஊடக பிரிவு நிருபர் செய்தி சேகரிக்க சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அவர் வன்முறை போராட்டங்களால் சேதமடைந்திருந்த பணம் வழங்கும் இயந்திரம் ஒன்றை தனது தொலைபேசி மூலம் படம் பிடித்து கொண்டிருந்துள்ளார்.
அவருக்கு பின்னால் கேமிராமேன் ஒருவரும் படம் பிடித்தபடி இருந்துள்ளார். கஹோனா சம்பவங்களை நேரிடையாக படம் பிடித்து பேஸ்புக் வழியே செய்தி வழங்கும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கி குண்டு ஒன்று அவர் மீது பாய்ந்ததில் அவர் சரிந்து கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.
வன்முறை சம்பவங்களால் நேற்று வரை 25 பேர் பலியாகியுள்ளனர் என உள்ளூர் மனித உரிமை குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது