சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 20-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அம்பதி ராயுடு (79), சுரேஷ் ரெய்னா (54) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பந்து வீச்சாளர் தீபக் சாஹல் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி ரிக்கி புய் (0), மணிஷ் பாண்டே (0), தீப் ஹூடா (1) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் ஷாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஷாகிப் அல் ஹசன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேன் வில்லியம்சன் உடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. நேரம் ஆகஆக கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
35 பந்தில் அரைசதம் அடித்த கேன் வில்லியம்சன் அதன்பின் வாணவேடிக்கை நிகழ்த்தினார். கடைசி 18 பந்தில் (3 ஓவர்) சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வெயின் பிராவோ வீசினார். இந்த ஓவரில் பிராவோ 9 ரன்கள் விட்டுக்கொடுத்து கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். வில்லியம்சன் 51 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். வில்லியம்சன் அவுட்டால் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கம் திரும்பியது.
கடைசி இரண்டு ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்டது, யூசுப் பதான் உடன் சகா ஜோடி சேர்ந்தார். 19-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் யூசுப் பதான் சிக்ஸ் அடித்தார். ஆனால் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஷித் கான் கடைசி பந்தில் சிக்ஸ் தூக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோ கடைசி ஓவரை வீசினார். முதல் மூன்று பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4-வது பந்தை ரஷித் கான் சிக்சருக்கு தூக்கினார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ரஷித் கான் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.