அமைச்சரவையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் தொடர்பான முக்கிய பேச்சு இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பியிருக்கின்றார்.
இதனிடையே எதிர்வரும் மே 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஏற்படும் அதிரடி நடவடிக்கை தொடர்பாக எதிரணியினர் வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும் இன்று நடைபெறவுள்ள சந்திப்பின்போது ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.