யட்டியந்தோட்டையில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் அவல நிலை குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், குறித்த பகுதியில் நீண்ட நாட்களாக கவனிப்பாரற்று இருக்கின்ற இந்த தம்பதி தங்குமிட வசதியின்றியும், முழுமையாக ஒரு வேளை உணவை கூட உண்ண முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
70 வயதான ரண் பண்டா, அவரின் மனைவியான 62 வயது குசுமாவதி ஆகியோரே இவ்வாறு பிள்ளைகளினால் கைவிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் யட்டியந்தோட்டை – வெரன்னாவ பகுதியைச் சேர்ந்தவர்கள். தற்பொழுது யட்டியந்தோட்டை – ருவன்வெல சந்திக்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடமொன்றில் வசித்து வருகின்றனர்.
வாகன விபத்தொன்றில் சிக்கிய ரண் பண்டா உளநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிள்ளைகளால் வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாக குசுமாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குசுமாவதி கருத்து தெரிவிக்கையில், என்னுடைய உயிர் இருக்கும் வரையில் நான் கணவருடன் இருக்கவே விரும்புகிறேன்.
அவரை நான் விருப்பத்துடன் பராமரிப்பேன். எனக்கு பிள்ளைகள் தேவையில்லை. எங்களை வெளியில் அனுப்பி ஆறு மாதங்களாகிய போதும் பிள்ளைகள் எங்களை தேடவில்லை. ஒவ்வொருவரிடமும் உணவிற்காக கையேந்துகிறோம்.
இந்த ஆறு மாதத்தில் ஒருவேளை கூட சரியாக சாப்பிடவில்லை. பலரும் எங்களுக்கு உணவு தந்தார்கள். சிலவேளைகளில் குடிப்பதற்கு நீர் கூட இருப்பதில்லை. அப்பொழுது கரவனெல்ல ஆற்றிலுள்ள நீரை குடிப்போம் என தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளியானது பலரையும் கலங்க வைத்துள்ளது. அத்துடன் குறித்த பெற்றோரின் பிள்ளைகள் தொடர்பிலும் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.