தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரி.இராமகிருஷ்ணன் எழுதிய ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும் என்ற நூல் அறிமுக விழா கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தினால் ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தமிழ் மக்கள் தமக்குரிய வழியை வகுத்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பில் உள்ள விடயங்கள் ஓரளவு திருப்தியளிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதால் தமிழர்கள் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்ள ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் இரா. சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மிக விரைவில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தாமதமின்றி தொடரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளதாக தெரிவித்த சம்பந்தன், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை இந்தியா தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.