வெசாக் பௌர்னமி தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் 5 வெசாக் வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், 11 மின் விளக்கு தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இக்காலப்பகுதியில் கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் ஆயிரத்து 900 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் பயன்படுத்தப்படவுள்ள அதேவேளை, போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஆயிரத்து 100 காவல்துறை உத்தியோகஸ்தர்களும் பயன்படுத்தப்படவுள்ளனர்.
வெசாக் வாரத்தில் விபத்துக்கள் அதிகரிக்க கூடும் என்பதால் வாகன சாரதிகளும் பொது மக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் கோரியுள்ளார்.
2017 ஆண்டு ஏப்பிரல் 11 ஆம் திகதி முதல் ஏப்பிரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 698 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு, 81 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், கடந்த வருடம் இதே காலப்பகுதியுடன் இந்த வருடத்தை ஒப்பிடும் போது வாகன விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக கூறினார்.
மேலும் குறித்த காலப்பகுதியில் இந்த வருடம் 57 பாரிய வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு, 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் உந்துருளி விபத்துக்களிலேயே அதிகமானோர் இறந்துள்ள நிலையில்,இதில் நூற்றுக்கு 90 வீதமான விபத்துக்கள், உந்துருளி செலுத்துனர்களின் கவனயீனம் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மேற்குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் 2017 ஆம் ஆண்டு 13 மனித கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு, 2018 ஆம் ஆண்டு 8 மனித கொலைகள் இடம்பெற்றுள்ளன.
எனவே காவல்துறையினரின் வினைத்திறனான செயற்பாடுகளினால் இந்த முறை விபத்துக்களும், மனித கொலைகளும் குறைவடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டார்.