உத்தரப்பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு மாணவியின் ஜாதியைக் கேட்ட ஆசிரியர், அவர் தலித் மாணவி என்று தெரிந்ததும் கடைசி பெஞ்சில் உட்கார வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யனாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள முசாஃபர் நகரில் உள்ள சனதன் தர்மா என்ற தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியின் ஜாதியை, வகுப்பு ஆசிரியர் கேட்டுள்ளார்.
அப்போது அந்த மாணவி தான் ஒரு தலித் சமூகத்தைச் சார்ந்தவள் என்று கூறியுள்ளார். மாணவி தலித் என்று தெரிந்ததும், முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவியை, அனைவரது முன்பும் கடைசி பெஞ்சில் போய் உட்காரு என்று கூறியுள்ளார்.
காரணமே இல்லாமல் தான் கடைசி இருக்கைக்கு அனுப்பப்பட்டதை எண்ணி நொந்த அந்த மாணவி, வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், பள்ளிக்கு வந்து சகமாணவிகளிடம் ஆசிரியரின் நடவடிக்கையை விசாரித்தனர். தன் மகள் தலித் என்பதால் கடைசி பெஞ்ச்க்கு அனுப்பிய, வகுப்பு ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.