வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.
மாகாண பிரதம செயலாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சரவையில் மோசடிகள் இடம்பெறுவதாக, யாழ். பத்திரிகையொன்று அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்று புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த ஆளுநரிடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் போதே ஆளுநர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
மேலும், விசாரணையின் பின்னரே இவ்விடயம் தொடர்பாக பதிலளிக்க முடியுமென்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண சபையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக கடந்த வருடங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருவர் பதவி விலகினர். இந்நிலையில், வடக்கு அமைச்சரவை தொடர்பில் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.