நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 2020 இற்குள் நல்ல தீர்வினை முன்வைப்பார்கள். அதற்கான ஆலோசனைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக் வடமாகாண பாடசாலை நூலகங்கள் மற்றும் சமூக மட்ட நூலகங்களுக்கான நூல்களை விநியோகம் செய்திருந்தார்.
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிடின், நிர்வாக முடக்கங்களை முன்னெடுப்போம் என தெரிவித்திருந்தார். கூட்டெதிரணி பொதுத் தேர்தல் நடாத்துமாறும், அரசாங்கத்தினை கலைப்பதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். பொதுத் தேர்தல் நடாத்த முடியுமான, அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றும் ஊடகவியலாளா் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டுமென்றும், அரசாங்கம் அபிப்பிராயம் வைத்துள்ளதுடன், ஆலோசனைகளையும் நடாத்தி வருகின்றார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதுடன், அந்தப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தமது நேரத்தினையும் செலவழிக்கின்றார்கள்.
எனவே, 2020 ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைப்பார்கள் என எண்ணுகின்றேன்.அத்துடன், மகிந்தவின் யோசனை மடத்தனமான யோசனை, தற்போது அரசாங்கத்தினை கலைக்க முடியாது.
அரசாங்கத்தினைக் கலைக்காது எவ்வாறு பொதுத் தேர்தல் வைக்க முடியும். அது நடக்கின்ற விடயம் அல்ல.2020 ஆம் ஆண்டு வரைக்கும் அரசாங்கம் நீடிக்கும் என்றும், கடவுள் புண்ணியத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதிக்குப் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் சக்தி வாய்ந்த அரசாங்கமாக செயற்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்