ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய நிறைவேற்று சபையில் நேற்று தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், ரி.பி.இலங்கரட்ன, அலவி மௌலானா போன்ற தொழில் வர்க்கத்திற்காக அளப்பெரும் சேவையாற்றிய தொழிற்சங்கத் தலைவர்களை பாராட்டும் மாநாடொன்று எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் கட்சியின் மீள் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்று கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
மே தின நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி நாட்டிற்கு நற்பெயரையும், பல நன்மைகளையும் ஈட்டிக் கொடுத்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதிக்கு 53 நாடுகளின் அரச தலைவர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.