பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது நடித்து வரும் படப்பிடிப்பில் குண்டு வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிக்கு வில்லனாக ‘2.O’ படத்தில் நடித்துள்ளார். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இவர் தற்போது ‘கேசரி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் கிராமத்தில் நடந்தது. படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமார் உட்பட படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது, படத்தின் சண்டை காட்சியின் போது வெடித்த குண்டு காரணமாக தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பில் பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட் முற்றிலும் கருகியது.
வேகமாகப் பரவிய தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். இந்த விபத்தில் படக்குழுவினர் காயமின்றி தப்பியதாக தெரியவந்துள்ளது.