கடந்த 2015-ம் ஆண்டு பெய்த தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். பலரது நிலைமை என்ன ஆனது என்றே இதுவரை தெரியாமல் உள்ளது.
இந்த பெருவெள்ளத்தின் போது முடிச்சூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஏ.சி.மெக்கானிக்காக பணியாற்றி வந்த அருண்குமார் (வயது 24) தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவர் வேலை பார்த்த நிறுவனத்தினர் பீர்க்கண்கரணை போலீசில் புகார் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் சமத்துவபெரியார் நகர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்று கரையோர முட்புதரில் மனித எலும்புக்கூடு கிடந்தது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் பீர்க்கண்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
அப்போது அங்குள்ள முட்புதரில் கிடந்த அடையாள அட்டையை கைப்பற்றினார். அதில் அருண் குமார் என்று குறிப்பிட்டு இருந்தது.
எனவே மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெருவெள்ளத்தின்போது மாயமான அருண்குமாருடையதாக இருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள். மாயமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு எலும்புக்கூடுகள் சிக்கி உள்ளது.
அருண்குமாரின் சொந்த ஊர் புதுக்கோட்டை ஆகும். இதுபற்றி அங்குள்ள அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ரசாயன பரிசோதனைக்கு பின்னர் அவை அருண்குமாரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
பெருவெள்ளத்தின் போது மாயமானவரின் எலும்புக் கூடுகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.