ஆதி அந்தம் இல்லாத அரும்பெரும் சிறப்புடைய, இந்து மதத்தில் ஊடுறுகின்ற ஈடு இணையற்ற முனிவர்களில் ஒருவரே வியாசர்.
பகவான் விஸ்ணுவின் ஆதி அவதாரமாக இந்த வியாசர் கருதப்படுகின்றார்.
பராசர முனிவருக்கும், சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவர் வியாசர். இன்றும் சிரஞ்சீவிகளில் ஒருவராக சாவில்லாமல் வாழ்ந்து வருகின்றார்.
இத்தகு சிறப்புடைய வியாசர் ஆற்றிய சேவைகள் எண்ணற்றவை ஆகும்.
வேதங்களை வகுத்தல்
இந்துமதம் தனின் பொதுநூலாக விளங்கும் வேதங்களை நான்காக வகுத்தவர் வியாசரேயாவார்.
அதனால்தான் அன்று முதல் வேத வியாசர் எனும் நாமம் பெற்றார்.
எம் பெருமான் சிவன் வாயிலாக தோன்றிய வேதங்களை ஒன்று திரட்டி இருக்கு வேதம், யசூர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் எனும் நான்கு பிரிவுகளாக வகுத்தல் செய்தார் வியாசர்.
புராணங்களை பாகுபாடு செய்தல்
இந்து மதத்தின் பெமைகளையும், சிறப்பினையும் கதை வழியாக எடுத்துரைக்கின்ற புராணங்களை ‘மகாபுராணங்கள்’ எனும் வகைப்பாட்டில் வகுத்தல் செய்தார் வியாசர்.
அதுவே ‘பதினெண் புராணங்கள்’ எனப்படுகின்றன.
அத்தகு மகாபுராணங்கள் பதினெட்டில், சிவபுராணங்கள் பத்து, விஸ்ணு புராணம் நான்கு, பிரம்ம புராணம் இரண்டு, சூரிய புராணம் ஒன்று, அக்னி புராணம் ஒன்று என் றவாறு அமைவுறுகின்றன.
இவை தவிர ‘உபமகாபுராணங்கள்’ எனவும் பதினெட்டு புராணங்கள் காணப்படுகின்றன. அவற்றையும் வகுத்தல் செய்தார் வியாசர்.
மகாபாரதத்தினை உரைத்தல் செய்தல்
ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதத்தினை விநாயகர் துணை கொண்டு வியாசரே இயற்றியருளினார்.
மகாபாரதம் எனும் ஈடு இணையில்லாத பெரும் காப்பியம் தனை விநாயகர் துணை கொண்டு நூலாக அருளிச் செய்த பெருமை வியாசரையே சாரும்.
மகாபாரதத்தை எழுதும் படி விநாயகரிடம் சென்று வியாசர் வேண்ட, அதற்கு விநாயகர், ஒரு நிபந்தனை விதித்தார்.
அது யாதெனில், தான் மகாபாரதத்தை எழுதத் தொடங்கியதும் இடையில் நிறுத்தாமல் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதாகும்.
அதற்கு உடன்பட்ட வியாசர் உடன் தானும் ஒரு நிபந்தனையை விநாயகரிடம் சமர்ப்பித்தார். தான் கூறுகின்ற பாடல்களை பொருள் உணர்த்தும் வகையில் தாம் எழுத வேண்டும் என்பதே அதுவாகும். அதற்கு விநாயகரும் உடன்பட அவர்கள் இருவரின் கூட்டு முயற்சியில் மகாபாரதம் எனும் இதிகாசம் உருவாக்கப்பட்டது.
மகாபாரதக் கதையில் இழையோடும் வியாசர்
மகாபாரத்தில் தானும் ஒரு கதாபாத்திரமாக இழையோடியிருக்கின்றார் வியாசர். மகாபாரத்தில், குரு வம்சத்தின் வம்ச விருத்தி யினை ஏற்படுத்தியவர் வியாசரே. தன் தாய் சத்தியவதியின் வேண்டுதலுக்கு அமைய அந்தச் செயலை அவர் புரிந்தார். அதன்படி திருதராட்டினன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் வாயிலாக பிறந்தனர் என்பதும் மகாபாரதத்தில் வெளிப்படும் கருத்தாகும்.
இது மட்டுமன்றி, காந்தாரி ஒரு முறை செய்த பெரும் தவறினால் சிதைவுண்ட அவளது கருவினை தன் சக்தியினால் நூற்றியொரு பாகங்களாக பிரித்து அவற்றிற்கு உயிர் கொடுத்து அவர்களை நிலவுலகில் பிறப்பதற்கு வழிவகை செய்தார். அவர்களே கௌரவர்கள் எனப்படுகின்றனர்.
மேலும், ஒரு முறை பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக வர வேண்டிய சூழ் நிலையில் அந்தக் குழப்பத்தினை தீர்த்து வைத்தவரும் வியாசரே. மேலும், பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலிக்கு இடையிலான இல்லற வாழ்க்கையினை வகுத்து அதன்படி அவர்களை நல் வழிப்படுத்தியவரும் வியாசரேயாவார்.
இது மட்டுமன்றி, மகாபாரத போரானது நிகழ இருக்கும் சமயம் அஸ்தினாபுரம் வந்த வியாசர் அங்கு அரசன் திருதராட்டினனிடம், நிகழ இருக்கும் போரினைக் காண தாம் விரும்பினால் நான் தமக்கு ஞானக் கண் பார்வையினை அளிப்பதாகக் கூறினார். ஆனால் திருதராட்டினனோ அதனை மறுத்து தனக்கு பதில் தன் ஆலோசகன் சஞ்சயனுக்கு அதனை வழங்கும்படி வேண்டினான். வியாசரும் அவ்வாறே திவ்ய திருஸ்டியினை சஞ்சயனுக்கு கொடுத்தருளி அங்கிருந்து புறப்பட்டார்.
மகாபாரதப் போரின் இறுதிக் கட்டத்தில் அர்ச்சுனனும் அஸ்வத்தாமனும் போர் செய்யும் போது இருவரும் பிரம்மாஸ்திரத்தினை பிரயோகிக்கின்றனர். இரண்டு பிரம்மாஸ்தி ரங்கள் மோதும் போது அது உலக அழிவிற்கே வழி வகுக்கும் என்பதை உணர்த்த வியாசர் உடன் அவ்விடம் தோன்றி அவர்கள் இருவரையும் அஸ்திரங்களை திரும்பிப் பெற்று உலக நலனை காக்கும் படி அறிவுறுத்தினார்.
ஸ்ரீமத் பாகவதம், விஸ்ணு சகஸ்ர நாமம் என்பவற்றை அருளிச் செய்தல்
விஸ்ணுவின் பெருமை கூறும் புராணங்களில் ஒன்றான ஸ்ரீமத் பாகவத புராணத்தை இயற்றியவரும் வியாசரே. விஸ்ணுவின் அவதாரச் சிறப்புக்கள், விஸ்ணுவின் மகிமைகள், விஸ்ணு பக்தியின் மேன்மை என்பவற்றை உள்ளடக்கியதாக அரும் பெரும் புராணமாக ஸ்ரீமத் பாகவத புராணத்தை இயற்றினார்.
மேலும், விஸ்ணுவின் சிறப்புரைக்கும் விஸ்ணு சகஸ்ர நாமத்தினை அருளிச் செய்தவரும் வியாசரே. மகாபாரத்தின் ஒரு பகுதியாக விளங்குவது இதுவாகும். மகாபாரதப் போரானது முடிவடைந்த பின் அம்புப் படுக்கையில் இருந்து பிதாமகர் பீஷ்மரிடம் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் இறைவனது இயல்புகள் பற்றிப் பல சந்தேகங்களை வினாக்களாக கேட்டார்.
அதற்கு பீஸ்மர் அளித்த பதிலுரைகளைத் தொகுத்து விஸ்ணு சகஸ்ர நாமமாக வகுத்தல் செய்தார் வேத வியாசர். இது மட்டுமன்றி பிரம்மசூத்திரம் எனும் நூலை இயற்றியவரும் இவரே.
இவ்வாறு ஒப்பற்ற பல செயல்களை செய்தருளிய வியாசர் ஓர் ஈடு இணையில்லாத முனிவராக, எமது இதிகாச புராணங்களில் ஊடுகின்ற தன்மையினைக் கண்டு கொள்ளலாம். எமது இந்துமதத்திற்கு எண்ணற்ற செயல்களை ஆற்றிய வியாசரின் பெருமையும், சிறப்பும் காலம் உள்ள வரை நிலைத்திருக்கும்.