சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை நிலையங்களின் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுப்புகள் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்ப்பட்டுள்ளது.
இதற்கான கட்டளையை வடமாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ரொசான் பெர்னாந்து, சகல காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார்
சாவகச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பலொன்று அடாவடிகளில் ஈடுபட்டதனால் அந்த வீடுகளில் பெறுமதியான பொருள்கள் நாசமாகின.
அத்துடன், கொக்குவில் முதலி கோவிலடியில் ஆவா கும்பலைச் சேர்ந்தவர் என கூறப்படுவரால் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளானார்.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இன்று வரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அடங்கியிலிருந்த வாள்வெட்டுக் கும்பல்கள் மீளவும் அடாவடிகளில் ஈடுபடுமென வடமாகாண மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாண பிராந்திய காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுப்பு இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த வடமாகாண மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் பணித்துள்ளார்.