மதுபோதையில் வாகனம் செலுத்திய 27 பேர் மாட்டினர். அவர்களுக்குத் தண்டம் விதித்த யாழ்ப்பாண நீதிவான் மன்று, 27 பேரினதும் சாரதிப் பத்திரங்களை 9 மாதங்களுக்குத் தடுத்து வைக்குமாறும் உத்தரவிட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் வெவ்வேறு நாள்களில் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று 37 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.
மதுபோதையில் சாரத்தியம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 27 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அவர்களில் 3 பேர் அரச உத்தியோகத்தர்கள் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அவர்களின் மூவருக்கும் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
ஆயிரத்து 500 ரூபா அரச செலவாகச் செலுத்தவும் நீதிமன்று உத்தரவிட்டது. அவர்கள் மூவரின் சாரதி அனுமதிப் பத்திரங்களையும் 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கவும் நீதிமன்று கட்டளையிட்டது.
இதே குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட ஏனைய 24 பேருக்கும் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. அவர்கள் 50 மணித்தியாலங்களுக்கு குறையாது சமூகப் பணியில் ஈடுபடவேண்டும், 24 பேரின் சாரதி அனுமதிப் பத்திரங்களை 9 மாதங்களுக்கு தடுத்தவைத்திருக்கவும் மன்று கட்டளையிட்டது.
இதுதவிர, புதுவருட தினத்தன்று சட்டவிரோதமாக அரச சாராயத்தை விற்பனை செய்தவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
அவரிடம் மீட்கப்பட்ட 175 மில்லி லீற்றர் கொள்ளவு கொண்ட 54 போத்தல்கள் சாராயத்தையும் பொலிஸார் சான்றுப் பொருளாக இணைத்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக குடியிருப்பை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் தலா ஆயிரத்து 500 தண்டம் அறவிடுமாறு மன்று கட்டளை வழங்கியது.