யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்து இருவர் அங்கிருந்த நடன ஆசிரியரையும் அவரது தாயையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் கொக்குவில் மூன்றாம் கட்டையில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த சம்பவத்திற்கான பின்னணியை கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் கூறுவதாவது,
தாக்குதலாளிகளின் இலக்கு ஆசிரியை இல்லை என்றும், அவரது தங்கையே என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆசிரியையின் தங்கை சம்பவத்தின்போது வீட்டில் இருந்துள்ளனர். அவர் சுதாரித்துக்கொண்டு ஒளிந்து கொண்டதால் தப்பிக்கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று பொலிஸார் சநதேகிக்கிக்கின்றனர்.
சுவிஸ் நாட்டிலிலுள்ள தனது கணவரின் முதல் மனைவியே தாக்குதலுக்குக் காரணம் என்று ஆசிரியையின் தங்கை விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் அவர் தன்னைத் தொடர்பு கொண்டு திருமண முறிவுப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அச்சுறுத்தினார் என்றும் அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரே கூலிக்கு ஆள்களை வைத்துக் கொல்ல முயற்சித்திருக்கலாம் என்றும் ஆசிரியையின் தங்கை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தாக்குதலாளிகள் அந்தப் பகுதியில் உள்ள பாதுகாப்புக் கமரா ஒன்றில் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று கொக்குவில் பகுதியில் உள்ள கடையொன்றில் கத்தி வாங்கிக் கொண்டு ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் பயன்டுத்திய மோட்டார் சைக்கிள் வவுனிய மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த பொலிஸார் சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்படலாம் என்றும் தெரிவித்தனர்.