லா லிகா கால்பந்து தொடரில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பார்சிலோனா அணி வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வெல்வதையும் உறுதி செய்துள்ளது.
ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், மொத்தம் 20 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதி வருகின்றன.
இந்நிலையில், பார்சிலோனா அணி தனது 34வது லீக் ஆட்டத்தில் டெபோர்டிவோ ல கோருனா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் 7வது நிமிடத்தில் கோட்டின்யோ பார்சிலோனா அணி சார்பில் கோல் அடித்து கணக்கை துவங்கினார்.
அதன் பின்னர், ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி கோல் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து, பார்சிலோனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டெபோர்டிவோ அணி வீரர்களான பெரஸ் 40வது நிமிடத்திலும், கோலக் 64வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதன்மூலம் 2-2 என ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டது. பரபரப்பான கடைசி கட்டத்தில் மெஸ்ஸி, 82வது மற்றும் 85வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தார்.
இது அவருக்கு ஹாட்ரிக் ஆகவும் அமைந்தது. டெபோர்டிவோ அணியினரால் பதில் கோல் அடிக்க முடியாததால், ஆட்ட நேர முடிவில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா 86 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த தொடரில் தோல்வியே காணாத பார்சிலோனா, 34 ஆட்டங்களில் விளையாடி 26 வெற்றி மற்றும் 8 டிரா கண்டுள்ளது.
இதன்மூலம் பார்சிலோனா அணி 25வது முறையாக லா லிகா சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.