பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம், புதிதாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிக்கும் கொலைக்களமாக மாறி வருகிறது. முறைதவறிய உறவின்மூலம் பிறந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகள் கொல்லப்பட்டு உடல்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்படுகிறது.
கடந்த 2017 ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடு முழுவதும் மொத்தம் 355 பச்சிளம் குழந்தைகள் கொன்று வீசப்பட்டிருப்பதாகவும், அதில் 99 சதவீதம் பெண் குழந்தைகள் எனவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
எதி அறக்கட்டளை, சிபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கராச்சியில்தான் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த (2017) ஆண்டில் 180 குழந்தைகளின் உடல்கள் குப்பைத் தொட்டிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் 72 குழந்தைகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குப்பைத்தொட்டியில் வீசப்படும் குழந்தைகளின் உடல்களை மீட்டு எதி அறக்கட்டளை இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்துள்ளது.
ஏழைகள் பலர் பிறந்ததும் இறந்த குழந்தைகளை நல்லடக்கம் செய்ய பணம் இன்றி குப்பை தொட்டியில் வீசுகின்றனர். தலா ரூ.2 ஆயிரம் செலவு செய்ய வழி இன்றி இத்தகைய நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் இந்த அமைப்பினர் கூறுகின்றனர்.
பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை பராமரிக்க குழந்தைகள் காப்பகங்களை அறக்கட்டளை அமைத்துள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த (2017) ஆண்டில் மட்டும் 14 குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் பெண்கள்.