அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வந்த வட கொரியாவுக்கும், அதைத் தீவிரமாக எதிர்த்து வந்த அமெரிக்காவுக்கும் போர் மூளும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணங்கள் உண்டு. ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் நிலைமை மாறி விட்டது.
இரு கொரியாக்களுக்கு இடையே மட்டுமின்றி, வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது.
வரலாற்று திருப்பமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பு எப்போது நிகழும் என்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இது தொடர்பாக டிரம்ப் நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இப்போதுதான் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் நீண்ட நேரம் பேசினேன். அது நல்லதொரு உரையாடல். எல்லா காரியங்களும் நல்லவிதமாக நடந்து வருகின்றன. வடகொரிய தலைவருடனான சந்திப்புக்கான இடமும், நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், மிச்சிகன் மாகாணம், வாஷிங்டன் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ வட கொரிய தலைவருடனான சந்திப்பு இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் நடைபெறும் என கருதுகிறேன். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை கைவிடச் செய்வதில் இது மிக முக்கியமானதொரு சந்திப்பாக அமையும்” என்று கூறினார். இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடக்க சாத்தியம் உள்ளதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.