காஞ்சீபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரம் பகுதிக்கு நேற்று மதியம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் வந்தான். அவன் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை தூக்கிக் கொண்டு செல்ல முயன்றான்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். ஆனால் அவனுக்கு அப்பகுதி மக்கள் பேசியது புரியவில்லை. மேலும் அவன் வடமாநில மொழியில் பதில் கூறினான்.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் குழந்தையை கடத்த வந்ததாக கூறி வடமாநில வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடலிலும் ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் இருந்து சிறிது தூரத்தில் ரெயில்வே சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
விசாரணையில் அவன் ஆஸ்பத்திரி யில் இருந்து தப்பி ஓடியவன் என்பது தெரிந்தது. பொது மக்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவன் இறந்து இருப்பது தெரியவந்தது.
அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்து உள்ளது. அவரை பற்றிய மற்ற விபரங்கள் தெரியவில்லை.
குழந்தை கடத்தலில் ஈடுபட அவன் கூட்டாளிகளுடன் வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக அவனுடன் வந்த கூட்டாளிகள் எங்கே? இதே போல் வேறு எங்கேனும் குழந்தை கடத்தலிலும் ஈடுபட்டு உள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.