உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு நேற்று நிறைமாத கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர். பிரசவ வலியால் துடித்த அவரை பரிசோதித்த டாக்டர்கள், உள்நோயாளியாக சேர்க்க அனுமதிக்கவில்லை. இதனால் பார்வையாளர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் அவரை தங்க வைத்தனர்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகி, குழந்தை பிறந்து விட்டது. இதையடுத்து உடனடியாக அந்த பெண்ணுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அட்மிசன் கொடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்காதது குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், உறவினர்களின் குற்றச்சாட்டை மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அமிதா கார்க் மறுத்துள்ளார். பிரசவத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண்ணின் உடல்நிலையை கருதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரை செய்ததாகவும், அதனை அவர்கள் ஏற்காமல் இரவு நேர தங்குமிடத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.