திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோட்டில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்த லாத்வியா நாட்டைச் சேர்ந்த லிகா என்ற இளம்பெண் திடீரென்று மாயமானார்.
அவருடன் வந்த அவரது தங்கை இலீஸ் இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லிகாவை தேடி வந்த நிலையில் திருவனந்தபுரம் வாழமுக்கிதோப்பு என்ற இடத்தில் அவர் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
முதலில் லிகா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் இந்த வழக்கின் விசாரணையை நடத்தினார்கள். ஆனால் லிகா தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல என்று அவரது தங்கை இலீஸ் கூறினார்.
லிகாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு அவர் கேரள போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மந்திரிகள், எதிர்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து லிகா சாவு குறித்த விசாரணை தீவிரம் அடைந்தது.
இதற்கிடையில் லிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கை, கழுத்து என்று உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் மூச்சு திணறி இறந்து இருப்பதும் தெரிய வந்தது. இதனால் லிகா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். லிகா பிணமாக கிடந்த காட்டு பகுதிக்கு போலீஸ் உயர் அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்களுக்கு முக்கிய தடயங்கள் சிக்கியது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்திய போது போதை மருந்து விற்பனை செய்யும் கும்பலுடன் லிகா சென்றதை பார்த்ததாக சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையின் போது இவர்கள் இதுபற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. விசாரணை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து இவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போதை மருந்து விற்பனை செய்யும் 5 பேர் கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். முதலில் அவர்கள் லிகா பற்றி எதுவும் தெரியாது என்று கூறி உள்ளனர்.
பிறகு போலீசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது லிகாவை ஒரு படகில் ஏற்றிக்கொண்டு கடற்கரையில் உள்ள தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
அந்த கும்பல் தோப்புக்கு சென்றதும் மது குடித்து உள்ளனர். அதன் பிறகு லிகாவை கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த கும்பல் அவரை தாக்கியதில் லிகா உயிரிழந்து விட்டார். அதன்பிறகு லிகா தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆட அவரை கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விட முயற்சி செய்தனர். ஆனால் அனைவரும் மதுபோதையில் இருந்ததால் அவர்களால் தற்கொலை நாடகத்தை முழுமையாக அரங்கேற்ற முடியவில்லை. இதனால் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அந்த கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.