கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் போத்தன்சேரியை சேர்ந்தவர் பஷீர் (வயது 32). இவரது மனைவி சுபைதா (29). கடந்த 2 வாரத்துக்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கியபோது கதவை திறந்து கொண்டு ஒரு மர்ம நபர் உள்ளே வந்தார்.
அப்போது அந்த நபர் கையில் வைத்திருந்த ஆசிட்டை பஷீரின் முகத்தில் ஊற்றினார். இதில் அதிர்ச்சியடைந்த பஷீர் அலறி சத்தம்போட்டார். சிறிது நேரத்தில் அவரது முகம் சிதைந்து கோரமானது. இதனிடையே மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுபைதா கணவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பஷீரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் அவர் கூறும்போது, நான் வீட்டில் தூங்கியபோது மர்ம நபர் ஆசிட் வீசிச்சென்றார். அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பஷீர் பரிதாபமாக இறந்தார். ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து பல கட்ட விசாரணைக்கு பின்னர் பஷீரின் மனைவி சுபைதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் சுபைதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுபைதா பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனை நான் தட்டிக்கேட்டேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட காரணம் அவரது முக அழகுதான்.
எனவே அவரது முகத்தை சிதைத்தால் வேறு எந்த பெண்ணும் எனது கணவரை பார்க்க மாட்டாள் என்று நினைத்த நான் எனக்கு தெரிந்த நபரை கூலிக்கு வைத்து கணவரின் முகத்தை கோரமாக்க கூறினேன்.
அதன்படி சம்பவத்தன்று நான் கதவை திறந்து வைத்தேன். தூங்கிய கணவரின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு செல்லும்படி அந்த நபரிடம் சைகை காட்டினேன். அவரும் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார். முகத்தை கோரமாக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் அவரை கொலை செய்வது நோக்கமால்ல என்று கூறினார்.
இதனையடுத்து போலீசார் சுபைதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசிட் வீசிய நபரை தேடி வருகிறார்கள்.