எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள், ஏற்றுக் கொள்ளப்படும் திகதி எதிர்வரும் மே 15 உடன் நிறைவடைகின்றது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் மே 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளதோடு, அதற்கு பின்னர் அல்லது தாமதமாகும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதால் உரிய தினத்தில் அதற்கு முன்னர் கிடைக்குமாறு விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அது தொடர்பான விண்ணப்பங்களை தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அந்தந்த பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளதோடு, இது வரை இவ்விண்ணப்பங்கள் கிடைக்கவில்லையெனின் திணைக்களத்தின் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளைக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.