லசந்தவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்னமும் இழுபடுகின்றது. குற்றப் புலனாய் வுப் பிரிவு நீதிமன்றுக்கு இதுவரை கொடுத்த அறிக்கை களை வாசித்துப் பார்த்தால் முன்னாள் பாதுகாப்பு செயலர் (கோத்தாபய ராஜபக்ச) இரண்டு மூன்று தடவைகள் கைது செய்யப்பட்டு இருக்கவேண்டும். இது யாருக்கு கீழே நடந்திருக்கின்றது என்று எழுத்தில் கொடுத்திருக்கின்றார்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில், நேற்று நடத்தப்பட்ட வேட்கை நிகழ்வில், தமிழ் ஊடகங்களின் செல் நெறியும், அது பயணிக்க வேண்டிய திசையும் என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் யாரின் உத்தரவில் நடந்துள்ளது என்று குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றுக்கு கூறியிருக்கின்றது. அப்பிடியிருந்தும் விசாரணை நகரவில்லை.
லசந்த கொல்லப்படுவதற்கு முன்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலர் சண்டேலீடர் பத்திரிகைக்கு எதிராக 2 வழக்குகள் தாக்கல் செய்திருந்தார். இனிமேல் என்னைப் பற்றி அவதூறாகப் பிரசுரிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு கூடப் பெற்றிருந்தார். லசந்த படுகொலை செய்யப்பட்ட பின்னர், அந்தப் பத்திரிகைக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் பயந்து விலகிவிட்டார்கள்.
வேறொரு சட்டத்தரணிகளிடம் அது கொடுக்கப்பட்டது. முதல் நாள் நீதிமன்றில், கோத்தபாயவின் தரப்பு சட்டத்தரணிகள், சத்தம் போட்டார்கள். லசந்த கொல்லப்படுவதற்கு முன்னர் எழுதிய இறுதி ஆசிரியர் தலையங்கத்திலும் கோத்தபாயவுக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளார்கள். நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு இருக்கும் நிலையிலும் இவ்வாறு செய்துள்ளார்கள் என்று சத்தம் போட்டார்கள். அந்தப் பத்திரிகைக்காக முன்னிலையான சட்டத்தரணிகளும் அதன் பின்னர் வரவில்லை.
அந்த வழக்கு என்னிடம் வந்தது. நான் முதல் நாள் மன்றில் முன்னிலையாகி வீடு திரும்பும்போது, பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையப் பக்கத்தில் கட்டுரை தரவேற்றப்பட்டிருந்தது. அதில், எனது படத்தையும் என்னுடன் முன்னிலையான சட்டத்தரணிகளினதும் படத்தைப் பிரசுரித்து, கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அடுத்த நாள் மன்றுக்கு என்னுடன் 33 சட்டத்தரணிகள் வந்தார்கள். சட்டத்தரணிகள் சங்கமும், இந்தக் கட்டுரைக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இரண்டு வாரங்களின் பின்னர் அந்தக் கட்டுரையை பாதுகாப்பு அமைச்சின் பக்கத்திலிருந்து நீக்கினார்கள்.
அந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை இரண்டு தடவைகள் குறுக்கு விசாரணை செய்தேன். ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலம் குறுக்கு விசாரணை செய்தேன். எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை. இன்று வரையில் ஒரு பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர, நீதிமன்ற வாசலில் நின்று ஒரு ஊடகவியலாளரையும் வரவிடவில்லை. உள்ளுக்கு தப்பித் தவறி வந்தவர்களையும் காதைப் பிடித்து வெளியே அனுப்பினார்கள். அதன் பின்னர், உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கை வந்த பின்னரும் அதையாரும் பிரசுரிக்கவில்லை என்றார்.