காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினரால் முகாம் அமைப்பதை நிறுத்துமாறு பாடசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்தும் கடற்படையினர் முகாம் அமைக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையினர் முகாம் அமைக்கும் நோக்குடன் பாடசாலைக் காணியைப் புல்டோசர் மூலம் துப்புரவு செய்தபோது பாடசாலை நிர்வாகம் காரைநகர் பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் ஆகியோரை அழைத்துக்கொண்டு சென்று இது பாடசாலைக்குரிய காணி இதில் முகாம் அமைப்பதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தது.
மறுதினம் சாதகமான பதிலைத் தருவதாகக் கூறிய கடற்படையினர் இரவோடு இரவாக பாடசாலைக் காணியின் குறிப்பிட்டளவு நிலப்பரப்பினைக் கையகப்படுத்தி முட்கம்பி வேலி அமைத்து முகாம் அமைக்கும் பணியினைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.
இதனால் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் அச்சத்தில் உறைந்திருப்பதுடன் பாடசாலை வளாகத்தில் கடற்படை முகாம் அமைப்பதால் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கும் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுவரை காலமும் கல்லூரிக்கு சற்றுத் தொலைவில் இருந்த கடற்படையினர் தற்போது பாடசாலைக் காணியில் முகாம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகள் எவரும் முன்வராமை குறித்து பாடசாலை சமூகம் விசனம் தெரிவித்துள்ளது.