அவுஸ்ரேலியாவின் கொமன்வெல்த் வங்கியானது 20 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கான தரவுகளை இழந்துவிட்டதாக சர்வதேச ஊடகமொன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவிலுள்ள கொமன்வெல்த் வங்கியானது 2016ஆம் ஆண்டில் இல்லாமலாக்கிய மின்னியல் காந்தநாடாவில் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கும் அதிகமான தமது வாடிக்கையாளர்களின் பெயர்கள், முகவரிகள், கணக்கு இலக்கங்கள் மற்றும் கணக்கறிக்கைகளுக்கான தரவுகளைப் பதிவுசெய்து வைத்திருந்தது.
வழமையான தொழிநுட்ப மாற்றீட்டு விதிக்கு அமைய அந்த காந்தநாடாக்களை 2016ஆம் ஆண்டில் இல்லாமலாக்கியுள்ளது. ஆனால் அதிலிருந்த தரவுகளை மீள்பதிவு செய்யாமல் காந்தநாடாவினை இல்லாமலாக்கியமை பெரும் பிரச்சினையாக மாறியது.
இந்நிலையில் குறித்த வங்கி இரண்டு வருடகாலமாக அது தொடர்பான எந்தவிதமான தகவல்களையும் தமது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்தமை இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தச்சம்பவமானது அவுஸ்ரேலியாவில் நடந்த சமீபத்திய மிகப்பெரிய ஊழல் எனக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள அவ்வங்கி 15 வருடங்களாகச் சேமிக்கப்பட்டுவந்த அத்தரவுகள் பாதுகாப்பற்ற முறையில் அழிக்கப்பட்டமை உறுதியற்ற நிலையில் இருந்தமையிலேயே அத்தகவலினை வாடிக்கையாளருக்கு வழங்க முடியவில்லை எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த இந்த ஊழலானது விசாரணையில் நிரூபிக்கப்படும் எனில் சம்மந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அவை சிறைத்தண்டனையாகவும் இருக்கலாம் எனவும் அவுஸ்ரேலியப் பொருளாளர் Scott Morrison எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.