லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரஞ்சித் லியோன் அவர்களின் தாயாரின் இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றுள்ளன.
கடந்த சனிக்கிழமை உயிரிழந்த இவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் மிகப் பெரிய வியாபார வலையமைப்பை உருவாக்கி, மேற்குலக வியாபார நிறுவனங்கள் பலவற்றை பின்னுக்குத் தள்ளி, தொலைத்தொடர்பு வியாபார உலகில் மிகப்பெரிய சாதனை படைத்து ஈழத் தமிழருக்குப் பெருமை சேர்த்தவர் ரஞ்சித் லியோன் அவர்கள்.
தனது வெற்றியின் பின்னணியில் இருந்த பெண் என்று திரு.லியோன் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு நபர் தான் அவரது தாயாரான திருமதி இராஜேஸ்வரி (மலர்) இராசய்யா லியோன் அவர்கள்.
இளவயதில் தனது கணவனை இழந்த நிலையில், தனி ஒரு பெண்ணாக நின்று உழைத்து, ரஞ்சித் லியோனையும் அவரது சகோதர சகோதரியையும் கல்வியிலும், வியாபாரத்திலும் முன்னேற்றிய அந்தத் தாயார், இன்று பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.