தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தனது கட்சி உறுப்பினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டும் தலைவராக இருக்கட்டும். அதனைவிடுத்துத் தமிழ் மக்களின் தேசியத் தலைவராக காட்டிக் கொள்ளும் கேலிக் கூத்துக்களை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.துளசி தெரிவித்தார். “தம்பி பிரபாகரன் இப்போது இறந்து விட்டார். அவர் விட்டுச் சென்ற கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகின்ற எமது மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் தலைமையில் எமது இனம் ஒன்றுபட்டுத் திரண்டு போராடுவதன் மூலம்தான் எமது இழந்த உரிமைகளைப் பெற்றெடுக்க முடியும்” என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்திருந்தார்.
கிட்டு பூங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொழிலாளர் தினக் கூட்டத்தில் அவ்வாறு கூறியிருந்தார். இது தொடர்பில் துளசியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:
“தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் என்ன நடந்தது? அன்றைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகளினுடைய தலைமையின் முடிவு என்னவாக இருந்தது என்பனவற்றை காலம்தான் பதில்கூறும். அதற்காகத்தான் முன்னாள் போராளிகளான நாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். உலகமும் தமிழ் மக்களும் அதுவரை பொறுமை காக்க வேண்டும்.
ஈழப் போராட்டத்தின் இறுதித் தருணம்வரை பங்குபற்றி போராடிய எத்தனையோ போராளிகள் உள்ளனர். முள்ளிவாய்க்காலில் இறுதியில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். விடுதலைப் புலிகளின் தலைமை என்ன முடிவு எடுத்திருந்தது என்பதை வெளிப்படுத்த காலம் தேவை” என்றார்.