தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் ஒருவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாத்தாவை கடந்த மாதம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அருகில் இருந்து தனது தாத்தாவை அவர் கவனித்துவந்தார். அப்போது, பக்கத்து கட்டிலில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரை, அவரது உறவினரான சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக் (வயது 24) என்பவர் அடிக்கடி பார்க்கவந்தார்.
இதனால் அவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அவர் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை சேலத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் நெருங்கி பழகியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, கடந்த வாரம் அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்புகொண்ட நைம் மாலிக், அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும், இதனால் உடனே சேலத்திற்கு புறப்பட்டு வருமாறும் தெரிவித்தார். காதலன் கூறியதை நம்பிய அந்த பெண் தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு வந்தார்.
அவர்கள் இருவரும் குரும்பப்பட்டி பூங்கா, சேலம் அண்ணா பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனர். அப்போது, நைம் மாலிக், குளிர்பானத்தில் மதுவை கலந்து காதலிக்கு கொடுத்ததாக தெரிகிறது. அதை குடித்தவுடன் சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் சேலம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
தனது நண்பர்கள் இருவரையும் நைம் மாலிக் செல்போன் மூலம் தொடர்புகொண்டு அந்த தங்கும் விடுதிக்கு வருமாறு கூறியதால் அவர்களும் அங்கு வந்தனர். விடுதியில் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை, அவரது காதலன் நைம் மாலிக்கும், அவரது நண்பர்களும் மாறி மாறி கற்பழித்தனர்.
மயக்கம் தெளிந்த பிறகும் அந்த பெண்ணை மிரட்டி விடிய விடிய அவர்கள் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது, போலீசில் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர். மறுநாள் காலையில் அந்த பெண்ணின் ஏ.டி.எம். கார்டை வாங்கி அதன்மூலம் ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு 3 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நைம் மாலிக் மற்றும் அவரது நண்பர்களான சேலம் காமராஜ் காலனியை சேர்ந்த நபீஷ் (29), பெரமனூரை சேர்ந்த ரஞ்சித் என்கிற விக்னேஷ் (25) ஆகிய 3 பேரையும் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்