நெல்லை மாவட்டம் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள டெலிபோனுக்கு கடந்த 26-ந்தேதி இரவு ஒரு போன் வந்தது. போலீஸ் நிலையத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் போனை எடுத்து பேசினார்.
அப்போது எதிர்முனையில் இருந்து வாலிபர் ஒருவர் பேசினார். அவர் முதலில் யார்? எந்த ஊர்? என்று விசாரிப்பது போல் பேசிவிட்டு, ‘பெண் போலீசின் குரல் அழகாக இருப்பதாக கூறி ஆபாசமாக பேச தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ், இது போலீஸ் நிலையம் என்று எச்சரித்துள்ளார். ஆனாலும் அந்த வாலிபர் மிகவும் மோசமாக ஆபாசமாக பேசி ‘உல்லாசமாக இருக்கலாம் வாரியா’ என்று அழைத்துள்ளார். இதனால் அந்த பெண் போலீஸ் அதிர்ச்சியடைந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போவதாக கூறியுள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசிய வாலிபர், ‘வழக்கு பதிவு செய்தால் நடப்பது வேறு’ என்று மிரட்டி விட்டு போனை வைத்து விட்டார்.
இதுகுறித்து அந்த பெண் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அந்த குறிப்பிட்ட நேரத்தில் ராதாபுரம் போலீஸ் நிலையத்திற்கு பேசியது யார்? என்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த அழைப்பு ஒரு செல்போனில் இருந்து வந்துள்ளது. அந்த செல்போன் எண்ணை வைத்து அது யாருடையது என்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அது ராதாபுரம் அருகே உள்ள சிங்காரத் தோப்பு கிராமத்தை சேர்ந்த கொம்பையா என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அவர் ராணுவ வீரராக சிக்கிம் எல்லை பகுதியில் பணியில் இருப்பதும் தெரியவந்தது.
அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் செல்போனில் பேசிய போது கொம்பையா முன்னுக்கு பின் முரணாக பேசி, செல்போன் தொடர்பை துண்டித்து விட்டார்.
இதனால் ராதாபுரம் போலீசார் கொம்பையா மீது பெண் வன்கொடுமை பிரிவு 354 (ஏ), 3-வது பிரிவு, 509 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். விரைவில் தனிப்படை போலீசார் சிக்கிம் சென்று ராணுவ வீரர் கொம்பையாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.