பேஸ்புக் காதலியை திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் அவரது வீட்டிற்கு சந்திக்கச் சென்ற காதலன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் தென்னவன். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னை பூந்தமல்லியில் நண்பர்களுடன் தங்கியிருந்து, அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.
தென்னவனுக்கும், திருவொற்றியூர் மாணிக்கம் நகரில் வசிக்கும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கும், ‘பேஸ்புக்‘ மூலம் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.எல். 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
முதலில் பேஸ்புக் மூலம் பழகி வந்த இருவரும் பின்னர் செல்போன் எண்களைப் பறிமாறிக் கொண்டனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாணவியின் பெற்றோர் சொந்த ஊரான கேரள மாநிலத்துக்குச் சென்று விட்ட நிலையில், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு தென்னவனை தொடர்பு கொண்ட அந்த மாணவி தான் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாகவும், வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து மாணவியின் வீட்டுக்கு தென்னவன் சென்றுள்ளனர். வீட்டில் சமைத்து இரவு உணவை முடித்த பின்னர்,தென்னவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்தோர் தென்னவனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே தென்னவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் தென்னவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தென்னவனின் மரணத்திற்கான காரணம் என்ன? எப்படி இறந்தார்? என்பது குறித்து மாணவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அங்கிருந்த உணவுப் பொருட்களையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளன என்று குறிப்பிடப்படுகின்றது