அலுவலகத்தில் ஆண்களுக்கு நிகராகப் பணிபுரியும் பெண்களுக்கு அதிக அளவில் மனஅழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர்.
ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக, வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்குச் சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நடுத்தர மற்றும் உயர்மட்ட நிர்வாகப் பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது பெண்களின் மனஅழுத்தத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், காரணமே இல்லாமலும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். அதற்கு உரிய ஒத்துழைப்புக் கிடைக்காதபோது துவண்டு விடுகின்றனர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.