தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்த 14 தமிழ் அகதிகளை வடக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர்.
பருத்தித்துறைக்கு வடமேற்காக 11 கடல்மைல் தொலைவில் டிங்கி படகு ஒன்றில் பயணித்த 14 பேரையும் சிறிலங்கா கடற்படையினர் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று நேற்று அதிகாலை 2 மணியளவில் இடைமறித்தது.
அந்தப் படகும், அதில் இருந்தவர்களும் காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள். ஏனைய நால்வரும் சிறுவர்களாவர்.
இவர்கள் அனைவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும், போர்ச் சூழலினால் 2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் சென்று புதுக்கோட்டையில் உள்ள அகதி முகாமில் தங்கியிருந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகளை அடுத்து, நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.