நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்ற நபர் மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதி வருகிறார்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மோசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அனிதா உயிரை பலி வாங்கிய அதே நீட் தற்போது இன்னொரு உயிரையும் பலி வாங்கியுள்ளது. இந்தமுறை தந்தை ஒருவரின் உயிரை பலி கேட்டு இருக்கிறது மத்திய அரசின் இந்த நீட். நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனுடன் கேரளாவின் எர்ணாகுளம் சென்ற இவர், மகனை தேர்வு அறைக்கு அனுப்பிவிட்டு, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இரவு முழுக்க பயணம் செய்து, மகனுடன் காலையில் தூங்காமல், தேர்வு அறையை கண்டுபிடித்த அலைச்சலில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இந்த தகவல் உள்ளே தேர்வெழுதும் அவரின் மகன், கஸ்தூரி மகாலிங்கத்திற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. கஸ்தூரி மகாலிங்கம் தன் தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதி வருகிறார். தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் அவருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அனிதாவின் உயிரை வாங்கிய போதே நீட் வேண்டாம் வேண்டாம் என்ற தமிழகம் கொந்தளித்தது, இப்போது இன்னொரு உயிரை இது குடித்துள்ளது. சிபிஎஸ்இ செய்த அடாவடி தனத்தால் இத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.