வடமாகாண முதலமைச்சர் முதலில் கட்சியினை ஆரம்பிக்கட்டும்.பின்னர் அதில் சேர்பவர்கள் பற்றி பார்க்கலாம்.பின்னர் அதில் இணைவது பற்றி பார்க்கலாம்.
அதனைவிடுத்து கட்சியில் முதல் ஆளாக சேர வேண்டும் என்ற குறுகிய நோக்கம் எனக்கில்லை என்று வடமாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் தற்போது மீண்டும் உள்ளக பிளவினை எதிர்கொண்டுள்ளது.
சித்தார்த்தன்,சிவராம் கொலையாளி ஆர்ஆர் மற்றும் மாகாணசபை அமைச்சர் பவன் ஆகியோர் ஒருபுறமாகவும் புலம்பெயர் பிரதிநிதிகள் வடமாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தரப்புடன் இணைந்து இன்னொருபுறமுமாக தற்போதுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சரது புதிய அரசியல் நகர்விற்கு சித்தார்த்தன் தரப்பு கூட்டமைப்பின் ஒற்றுமையினை காரணங்கூறி மௌனம் காத்துவருகின்றது.
இந்நிலையில் வடமாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் முதலமைச்சர் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவர் வடமாகாணத்திலே சுகாதார தொண்டர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள், தொண்டர் ஆசிரியர்கள், பட்டதாரிகள், காணாமல் போனவர்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டு வருகின்ற நிலையில் பல நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்ட சுகாதார தொண்டர்களின் பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.
வடக்கு மாகாணத்தின் அரசியல் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஒரு கட்சிக்கும் அல்லது கட்சியில் இருக்கின்ற ஒரு சிலருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இருக்கின்ற பிரச்சனையானது இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே சவால் விடுகின்ற பிரச்சனையாக சொல்லப்படுகின்றது.
முதலமைச்சர் முதலில் கட்சியை ஆரம்பிக்கட்டும் அவருடன் யார் யார் நிற்கின்றார்கள் என்று பார்ப்போம். என்னைப்பொறுத்த வரை முதலமைச்சர் கட்சி தொடங்குகின்றார் என்றவுடன் முதல் ஆளாக நான் போய் நிற்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் எனக்கில்லை.
இதில் தமிழ் மக்களை பொறுத்தவரை எல்லா கட்சிகளும் ஒர் அணியில் இருக்க வேண்டிய தேவையிருக்கின்றது. ஒரு கட்சிக்கு இன்னுமொரு கட்சி கூறினால் கேட்காது. ஆகவே தமிழ் மக்கள்தான் இதற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
இருப்பதை பிரிக்காமல் பிரிந்திருக்கின்ற உதிரிகளாக இருக்கின்ற எல்லா தமிழ் கட்சிகளையும் ஒன்றாக இணைத்து செயற்படுவதுதான் எங்களிற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்