அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக பயணித்த ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 131 பேர் மலேஷிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீனமயப்படுத்தப்பட்ட எண்ணெய் தாங்கிக் கப்பலில் பயணித்த 131 இலங்கையர்களில் 98 ஆண்கள் 24 பெண்களுடன் 4 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகள் உள்ளடங்குவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் இருந்து பலர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரியிருந்தனர்.
இந்த நெருக்கடி, அவுஸ்திரேலிய அரசியலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பும் வகையிலும் நவ்றூ மற்றும் மனூஸ் தீவுகளில் தடுத்துவைக்கும் வகையிலும் சட்டங்களை கடுமையாக்கியிருந்தது.
இதனையடுத்து சீரான இடைவெளியில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில், தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு சட்டவிரோதமான முறையில் செல்வதற்கு முயற்சித்த 131 பேர் மலேஷிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எட்ரா என்ற எண்ணெய் தாங்கி கப்பல் மூலமே இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடும் மலேஷியப் பொலிஸார்,சட்டவிரோதமாக பயணித்தவர்களின் நிழற்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த தனிநபர் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தந்திரமான ஆட்கடத்தல் நடவடிக்கையை அதிகாரிகள் முறியடித்துள்ளதாக மலேசியாவின் தலைமை பொலிஸ் அதிகாரி மொகமட் வசி ஹருன் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் இருந்து இந்த தனிநபர் குழுக்கள், செயற்பட்டுவருவதாகவும் ஸ்ரீலங்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளுடன் சர்வதேச ரீதியாக தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தும் மீன்பிடிப் படகுகளை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது மூன்று இந்தோனேஷியர்களும் நான்கு மலேஷிய நாட்டவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது