அக்கினிப் பறவைகள்’ என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
06.05.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தார்கள்.
மீள் வெளியீடு செய்யப்படும் தமிழீழ அடையாள அட்டையானது தற்கால உயர் தொழில்நுட்பத்துடன் கூடியதாக நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தார்கள்.
இது தொடர்பாக அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்:
01.01.2007 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கோடு தமிழீழத்தில் தேசிய அடையாள அட்டை வெளியிடப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு தமிழிறைமை பறிக்கப்பட்டதன் விளைவாக தமிழீழ தேசிய அடையாள அட்டையின் பயன்பாடு இல்லாமற் போனது.
இதனை மீளவும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் அக்கினிப் பறவைகளின் இந்த முயற்சி இன்றைய சூழ்நிலையில் தேவையானதா என்ற வினா எழுவது இயல்பானதே.
2009ம் ஆண்டில் இடம்பெற்ற தமிழினத்திற்கெதிரான வல்லாதிக்க சக்திகளின் கூட்டுச்சதி நடவடிக்கையானது இனவழிப்பு என்பதையும் தாண்டி தமிழீழ நடைமுறை அரசையும் இல்லாமற்செய்துவிட்ட ஒரு தேசிய அழிப்பு நடவடிக்கையாகும். தமிழீழ நடைமுறை அரசின் அழிவோடு தமிழீழக் கோட்பாட்டின் நடைமுறைச் சாத்தியமும் வலுவிழந்துபோயிருப்பதும் வெளிப்படை. தற்போது தமிழீழம் என்பது பெரும்பாலும் வெறும் நினைவுகளில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகவே காட்சியளிக்கிறது.
தமிழீழத் தேசியக்கட்டுமானம் என்பது நினைவுகளில் மட்டுமின்றி நடைமுறையிலும் பேணப்படவேண்டும். தமிழீழ இறைமையானது சரணாகதியடையவோ, தாரை வார்க்கப்பாடவோ இல்லை என்பதை நந்திக்கடல்வரை இடம்பெற்ற வீரம் செறிந்த மற்றும் பெரும் ஈகத்துடன்கூடிய போர் எமக்குப் புலப்படுத்தி நிற்கிறது.
தற்போதைக்கு தமிழீழத் தனியரசின் கட்டுமானங்களைத் தமிழீழத்தில் செயற்படுத்த முடியாத நிலை உள்ளபோதும், அதனை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப் பாடு உள்ளவர்களாக இருக்கிறோம்.
அந்த வகையில் தமிழீழத்தின் கட்டுமானங்களைப் புலம்பெயர்ந்த தேசங்களில் அந்நாடுகளின் சட்டங்களுக்கு அமைவாக நிறுவி அவற்றின் மூலம் தமிழீழத்தின் குடிமக்கள் என்ற நடைமுறை உணர்வில் தமிழர்கள் வாழ வழி சமைக்கவேண்டும். அதற்கான முதற்படியே இவ்வடையாள அட்டையின் மீள்வெளியீடாகும்.
இவ்வடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நபரும் பின்வரும் விடயங்களை முழுமையாகவும் மனப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
– தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனம். இவர்கள் தமக்கென ஒரு பாரம்பரிய தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். தனியே ஒரு மொழி, பாரம்பரியம், கலை, பண்பாடு மற்றும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டவர்கள்.
– ஈழத்தமிழரின் வரலாற்று இறைமையின் பாலும் மற்றும் வட்டுக்கோடடைத் தீர்மானத்தின் பாலும் தமிழீழ மக்கள் முழு இறைமைக்கு உரித்தானவர்கள்
– மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் தமிழீழ இறைமை நிறுவப்பட்டது.
– தமிழ் மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் காலங்காலமாக நடத்தப்பட்டு வந்த மற்றும் நடத்தப்பட்டு வருகின்ற திட்டமிட்ட ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள் அப்பட்டமான இனவழிப்பு நடவடிக்கையே ஆகும்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தமிழீழ அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவராகிறார்கள். இவ்வாறானதொரு மக்கள் தொகுதி உருவாவதன் மூலமாகத் தமிழீழத்தின் அடிப்படையான அடையாளம் நிறுவப்படுகிறது.
தமிழீழ அடையாள அட்டையின் மீள்வெளியீடு தமிழீழ அடையாளத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு மக்கள் குழுவை நிறுவுகிறது. தமிழீழக் கட்டுமானங்களை அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக உருவாக்கி அவற்றின் மூலம் தமிழீழக் கோட்பாட்டை நிலைநிறுத்திப் பேணுவதுடன், அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழீழ மக்களின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள், தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் அக்கினிப் பறவைகள் அமைப்பு தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.
தமிழீழ மரபுவழித்தாயகம் ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும் மற்றும் இனவழிப்பின் மூலமாகத் தமிழீழத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் , தமிழீழச் சித்தாந்தம் நிலைபெறுவதற்கும் மற்றும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்குமான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இதுவே தமிழீழ தேசத்தின் இருப்புக்கான இன்றைய இன்றியமையாத தேவையாகும்.
இந்த அடிப்படையில் முன் முயல்வுகளை எடுத்துவரும் அக்கினிப் பறவைகள் அமைப்பின் முயற்சிகளுக்கு அனைத்துத் தமிழீழ மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அக்கினிப் பறவைகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.