மும்பையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 13 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.
மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. கிறிஸ் லின், ஷுப்மான் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கில் 7 ரன் எடுத்த நிலையிலும், கிறிஸ் லின் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ராபின் உத்தப்பா உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் இடம் இருந்து போட்டியை தங்கள் பக்கம் இழுத்தது.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். உத்தப்பா அவுட்டான அடுத்த ஓவரிலேயே நிதிஷ் ராணா 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 39 பந்தில் 67 ரன்கள் தேவைப்பட்டது.
அதன்பின் வந்தவர்கள் தினேஷ் கார்த்திக் மட்டும் போராட, ரஸல் (9), சுனில் நரைன் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், மெக்கிளேனகன், பும்ரா, குருணால் பாண்டியா, மயாங்க் மார்கண்டே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 10 போட்டியில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது