இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் 2-வது ஆட்டமும், 38-வது லீக்கும் இந்தூரில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்கி ஷார்ட் (2), ரகானே (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நம்பிக்கை வீரர்களான சஞ்சு ஜாம்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (12), ராகுல் திரிபாதி (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரன் குவிக்க இயலவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் ஓரளவிற்கு அதிரடியாக விளையாடி 16 பந்தில் 24 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 153 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், அன்ட்ரிவ் டை 2 விக்கெட்டும், அஸ்வின், ராஜ்பூட், அக்சார் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி இதுவரை களமிறங்கிய ஐந்து போட்டிகளிலும் 50 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ளது. இந்த போட்டியில் இருவரும் நிதானமாக விளையாடினர். மூன்றாவது ஓவரை கவுதம் வீசீனார். அந்த ஓவரில் ராகுல் மூன்று பவுண்டரிகள் அடித்தார். அதனால் அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது.
4-வது ஓவரை ஜோப்ரா ஆர்சர் வீசீனார். அந்த ஓவரின் முதல் பந்தை கெய்ல் பவுண்டரிக்கு துரத்தினர். அடுத்த பந்திலேயே கெய்ல் 8 ரன் எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சனிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மயன்க் அகர்வால் களமிறங்கினார். அதற்கு அடுத்த ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் மயன்க் அகர்வால் 2 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கருண் நாயர் களமிறங்கினார்.
பஞ்சாப் அணி ஆறு ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர், ராகுல் இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை அனுரீத் சிங் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கருண் நாயர் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து வீசப்பட்ட 5-வது பந்தில் கருண் நாயர் கிளின் போல்டானார். அதன்பின் அக்ஸார் பட்டேல் களமிறங்கினார்.
கவுதம் வீசிய 13-வது ஓவரின் ஐந்தாவது பந்தை அக்ஸார் பட்டேல் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். அந்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகில் ஷார்ட் கேட்ச் பிடித்து, அக்ஸார் பட்டேலை ஆட்டமிழக்க செய்தார். அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டோயின்ஸ் களமிறங்கினார். பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சர் வீசிய 17-வது ஓவரில் பஞ்சாப் அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது. கடைசி கட்டத்தில் இரு பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக விளையாடிய ராகுல் 44 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 54 பந்தில் 84 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்), ஸ்டோயின்ஸ் 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின்மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில், 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது