முற்போக்கான கருத்துக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் இனவாதம் பேசும் நிலைக்கு தரம் தாழ்ந்து விட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கை குடியரசின் சுகாதார பணியாளர் சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற குறித்த மேதின பொதுக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ராஜித, தம்மை முற்போக்காளர்களாக காட்டிக் கொண்ட அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் இனவாதம், மதவாதத்துக்கு இரையாகி விட்டார்கள். எனக்கு அவ்வாறானவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது.
இன, மத விடயங்களுக்கு அப்பால் நின்று தீர்மானங்களை மேற்கொள்வதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியில் நான் விருப்பத்துடன் இணைந்துள்ளேன். ஐ.தே.க. ஆட்சியில் இருப்பதன் காரணமாகவே மொத்த தேசிய உற்பத்தியில் 1.7 வீதம் அளவு மட்டுமே சுகாதாரத்துக்கான நிதியொதுக்கீடு தற்போது 4.1 வீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த வருடம் எனது அமைச்சுக்கு 235 பில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நான் அமைச்சரவைப் பத்திரங்கள் மூலம் அதனை 500 பில்லியன் ரூபாவாக அதாவது ஐம்பதினாயிரம் கோடி ரூபாவாக அதிகரித்துக் கொண்டேன்.