ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்லப்படும் இலங்கையை, இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் பொலிஸ் இராஜ்ஜியம் என்றே சொல்ல வேண்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பாதுகாத்துக்கொண்டிருப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் எனவும், மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் இந்த அரசாங்கத்தை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி, சமனல விளையாட்டு மைதானத்தில் நேற்று (07) நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த நாட்டிற்கு முதலீட்டார்கள் இப்போது வருவதில்லை, மாறாக ஓடுகிறார்கள். அதற்கு காரணம் நாட்டில் நிலவும் ஸ்தீரமற்ற நிலையே ஆகும். தற்போதுள்ள அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் எப்போது முடிவிற்கு வருமென்றும், அதன் பிறகு தாங்கள் நாட்டிற்கு முதலீடு செய்ய வருவதாகவும் முதலீட்டாளர்கள் எம்மிடம் தெரிவிக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.