தென்னிந்திய சினிமாவில் 90 களில் கொடிகட்டி பறந்த நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
13 ஆண்டுகள் ஆசையாக காதலித்து, சாதியை மீறி பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
ரோஜா பிரபல நடிகையாக வலம் வந்தபோது, இயக்குநர் செல்வமணி படங்களை இயக்கியது குறைய தொடங்கியது. இதனால் மார்க்கெட் இல்லாத ஒரு இயக்குநரை திருமணம் செய்துகொள்ளபோகிறாயா என ரோஜாவின் மனதை பலர் குழப்பியபோதும், தனது காதலின் மீது உறுதியாக இருந்து செல்வமணியை மணமுடித்தார் ரோஜா.
காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-
தெலுங்கில் பிற இயக்குநர்களுடன் பணியாற்றினாலும் செல்வாவிடம் இருந்த நற்பண்புகளால் நான் கவரப்பட்டேன்.
என்னை பற்றி எனது, அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.
இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்’ என்று நானே சொல்லும் அளவுக்கு எனது தாயாரிடம் நற்பெயர் பெற்றார் செல்வமணி.
காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா பகிர்ந்துகொண்டது, செல்வா என்னிடம் எப்போதும் போலவே பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார்.
அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே’ என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.
எங்கள் `ரெட்டி’ வம்சத்தில், வேறு சாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் சாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.
ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றார்.
அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!’ என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
செல்வா எனக்காக 13 வருடம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார் ரோஜா.
ரோஜா- செல்வமணி தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.