மலேஷியாவில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அறிக்கைகள் சார்ந்த ஊடக கோரிக்கைகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு கிடைத்த வண்ணம் உள்ளதாக, அமைச்சு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2018 ஆண்டு மே 01 ஆம் திகதி இலங்கையர்கள் என நம்பப்படும் 131 நபர்கள் தன்ஜூங் காமோஹ், செடிலி, ஜொஹொர் பாருவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலேஷிய பொலிசாரின் விஷேட பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த 131 நபர்களில், 127 பேர் 1959 ஆம் ஆண்டின் 63 ஆம் இலக்க குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது ஜொஹொர் பாருவில் உள்ள பெகான் நெனாஸ் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள 4 நபர்கள் 2007 ஆம் ஆண்டின் மனித கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்த நபர்களை கடத்துவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
131 நபர்களின் அடையாளங்களை கண்டறிவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கைதாகியுள்ள குறித்த 131 நபர்களில் 43 பேர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தினால் (UNHCR) வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை கொண்டுள்ளனர் என ஆரம்ப தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையில், கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பபெற்றவுடன் சரியான வகையில் பகிர்ந்து கொள்ளப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.